குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட வள்ளங்களுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வேண்டும்

குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட வள்ளங்கள் அனைத்துக்கும் மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட வள்ளங்களுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வேண்டும்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் வள்ளங்கள் (நாட்டுப்படகு) உள்ளன. குமரி மாவட்டம் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மூதாக்கரை மீன்பிடி துறைமுகத்துக்கு தங்களது வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்தநிலையில் காற்றழுத்தம், கடல் சீற்றம் மிகப்பெரும் அளவில் இருந்ததால் கேரள அரசு கடலில் மீன்பிடிக்க தடை விதித்தது.

கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு மீன்துறை அலுவலர்களிடம் குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகள் கேரளாவில் இருந்து ஆய்வுக்கு கொண்டுவர முடியாதநிலை ஏற்பட்டது. ஆய்வு முடிந்து 2 நாட்கள் கழித்துதான் குமரி மாவட்ட வள்ளங்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன.

மண்எண்ணெய் நிறுத்தம்

இத்தகைய காலதாமதத்தால், மீன்துறை அலுவலர்கள் மீன்பிடி தொழிலுக்கு கிடைத்து வந்த மானிய மண்எண்ணெய்யை நிறுத்தி வைத்தனர். மண்எண்ணெய் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான வள்ளங்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் நிறுத்திவைக்கப்பட்டன. எனவே ஆய்வு செய்யப்படாத வள்ளங்களை ஆய்வு செய்ய மீன்துறை இயக்குனர், மீன்துறை அமைச்சர், மீன்துறை செயலாளர், குமரி மாவட்ட கலெக்டர், மீன்துறை துணை இயக்குனர், மீன்துறை உதவி இயக்குனர் ஆகியோரிடம் நேரடியாக மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 3-ந் தேதி குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்படாத வள்ளங்கள் மீன்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, மீன்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆய்வு செய்யப்படாத வள்ளங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மானிய மண்எண்ணெய் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கு பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து வள்ளங்களுக்கும் மானியத்தில் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com