மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை: காஞ்சீபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்

காஞ்சீபுரம் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் பொ.கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை: காஞ்சீபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்
Published on

விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடைக்கு பிறகு, மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும்போது வயலின் வரப்பு, வாய்க்கால் ஓரம், மரநிழல், ஈரமான பகுதிகள் மற்றும் உரம் குவித்த இடங்களை தவிர்க்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் அரை அடி முதல் முக்கால் அடி ஆழத்துக்கு குழி எடுக்க வேண்டும். அந்த குழிகளில் பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்திற்கு மேலிருந்து கீழாக சுரண்டி எடுக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த மண்ணை உலர்த்தி கல், வேர் முதலான பொருள்களை தவிர்த்து பின் அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ அளவுக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் வழங்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதால் பயிரின் தேவையறிந்து உரச் செலவை குறைக்கலாம். மண்ணில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தால் அதை கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம்.

மேலும் விவசாயிகள் மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண் பரிசோதனை தொடர்பான சந்தேகங்களுக்கு தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம்.

மண் பரிசோதனை செய்ய ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தங்கள் மகசூலை அதிகரித்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com