குமரியில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது பிரத்யேக கண்ணாடி மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

குமரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. பிரத்யேக கண்ணாடி மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
குமரியில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது பிரத்யேக கண்ணாடி மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
Published on

கன்னியாகுமரி,

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வரும் போது, சூரியன் மறைக்கப்பட்டு, சந்திரனின் நிழல் பூமியில் விழும். இதை சூரிய கிரகணம் என்கிறோம். இந்த அதிசய சூரிய கிரகணம் நேற்று காலை 8.08 மணி அளவில் தொடங்கி 11.19 மணி வரை நீடித்தது.

குமரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் 87 சதவீதம் வரை தெரிந்தது. தேய்பிறை நிலவு போல முதலில் சூரியன் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டது. அப்போது சூரிய வெப்பம் மிகவும் குறைவாக இருந்தது. வழக்கமான சூரிய வெளிச்சத்துக்கு மாற்றாக புதுவிதமான ஒரு வெளிச்சம் சூரியனில் இருந்து வெளிப்பட்டது. இந்த அற்புத காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் பெரும்பாலானவர்கள் பிரத்யேக கண்ணாடி அணிந்து கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும் எக்ஸ்ரே பிலிமை பயன்படுத்தியும் சூரிய கிரகணத்தை சிறுவர்-சிறுமிகள் கண்டும் களித்தனர். பல இடங்களில் சூரிய கிரகணம் நிழல் வடிவ ஒளி தரையிலும், வீட்டு சுவர்களிலும் தெரிந்தது. இந்த காட்சியை பார்த்து பெரியவர்கள் பரவசம் அடைந்தனர்.

சிவப்பு நிற வட்ட வளையம்

பின்னர் காலை 9.30 மணி அளவில் சூரியனானது, அமாவாசை முடிந்து 3 நாட்களுக்கு பிறகு நிலவு எப்படி காட்சி அளிக்குமோ அதுபோல காட்சி அளித்தது. அதன்பிறகு வளர்பிறை நிலவு போல சூரிய கிரகணம் மெல்ல மெல்ல அகன்று முழு சூரியன் வெளிப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தெரியவில்லை. குமரி மாவட்டத்தில் நேற்று வானில் மேக மூட்டம் இல்லாததால் அனைவராலும் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடிந்தது.

கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முக்கடல் சங்கமத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு சூரிய கிரகணத்தை பார்க்க நியூடோனியன் என்ற பிரத்யக கருவி பயன்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் திரளாக சேர்ந்து பிரத்யோக கண்ணாடி அணிந்து கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com