தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது

தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
Published on

தூத்துக்குடி,

தென்மேற்கு பருவமழையின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைத்திட, அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர்பொருள் கிட்டங்கிகளில் தேவையான அளவு உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்திருப்பதை சுகாதாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் பொதுமக்களை பாதுகாக்கும் படகு உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறையினர் மருத்துவ மீட்புக்குழுக்களை அமைத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தீயணைப்புத்துறையினர், போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் ஆகியோருக்கு பயிற்சி அளித்து, அவர்களையும் தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாதவகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கூட்டத்துக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், சமூக பாதுகாப்பு திட்ட துணை இயக்குனர் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com