சிட்டுக்குருவி மனிதர்

வீ ட்டில் செல்லப்பிராணிகளுக்கு பதிலாக, அழிந்துவரும் பறவைகள் இன பட்டியலில் இருக்கும் சிட்டுக்குருவிகளை வளர்த்து வருகிறார், சர்தார் இந்தர்பால் பாத்ரா.
சிட்டுக்குருவி மனிதர்
Published on

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் 100-க்கும் மேற்ட்ட சிட்டுக்குருவிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அவை வசிப்பதற்கு ஏற்ப வீட்டின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் கட்டமைத்து இருக்கிறார். சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப இவர் வீட்டை சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. சிட்டுக்குருவிகளின் வருகையால் சுற்றுச்சூழலுக்கு இதமாக வீட்டை மாற்றியமைத்திருக்கும் திருப்தியும் அவரிடம் வெளிப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகில் இருந்த மரம் வெட்டப்பட்டபோது அதில் வசித்த சிட்டுக்குருவி தான் கட்டிய கூட்டை இழந்து பரிதவித்த நிகழ்வு அவருடைய மனதை நெகிழவைத்திருக்கிறது. அப்போதே சிட்டுக் குருவிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்க முடிவு செய்து சிறு மண்பானைகளை ஆங்காங்கே பதித்து வைத்திருக்கிறார். அவைகளாகவே கூடு கட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளையும் வளர்க்க தொடங்கி இருக்கிறார்.

இன்று எனது வீட்டின் உள்ளே சிட்டுக்குருவிகள் பாதுகாப்பாக வசிப்பதற்கு 20 கூடுகள் இருக்கின்றன. வெளிப்புறத்தில் 200-க்கும் மேற்பட்ட கூடுகள் அமைந்திருக்கின்றன என்கிறார், இந்தர்பால்.

ஆரம்பத்தில் இந்தர்பால் வீட்டுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே சிட்டுக்குருவிகள் வந்திருக்கிறது. வெளிப் புறங்களில் மரங்கள் வளர்த்து அவை வளர தொடங்கியதும் அவற்றில் சிறு மண்பானைகளை கட்டி தொங்கவிட்டிருக்கிறார். அதனுள் துணிகள், பஞ்சுகள், புற்களை வைத்து சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் பிறகே சிட்டுக்குருவிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுக்க தொடங்கி இருக்கிறது.

இவரது வீட்டில் உள்ளவர்களின் கைகள், தோள்களில் அமர்ந்து சுதந்திரமாக அவை வலம் வந்து கொண்டிருக்கிறது. இவருடைய வீடு சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. பனாரஸுக்கு சுற்றுலா வருபவர்கள் இங்கு வந்து சிட்டுக்குருவிகளின் நடமாட்டத்தை ரசித்து பார்க்கிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் என் வீட்டுக்கு வந்து இயற்கை சூழலில் சிட்டுக் குருவிகள் வசிப்பதை ஆச்சரியமாக பார்வையிடுகிறார்கள். பிஸ்கெட், உணவு தானியங்களை அவைகளுக்கு வழங்குகிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார்.

இந்தர்பாலின் மகள் அம்ரிதா டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வருகிறார். சிட்டுக்குருவிகள் அவரிடம் வீட்டு செல்ல பிராணிகள் போல் நெருங்கி பழகுகின்றன.

எனது காலை பொழுது தொடங்குவதும், இரவு பொழுது முடிவடைவதும் சிட்டுக்குருவிகளுடன் தான். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சிட்டுக்குருவிகளை அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள். நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் அவை களுக்கான வசதிகளை செய்துவிட்டுத்தான் செல்வோம். வேலைக்காரர்கள் மூலம் உணவளிக்கவும் ஏற்பாடு செய்துவிடுவோம் என்கிறார்.

நகர்ப்புறமயமாதல் காரணமாக சிட்டுக்குருவிகளின் இயல்பான வாழ்விடம் கேள்விக்குறியாகிவரும் நிலையில் அவைகள் வசிப்பதற்கு ஏற்ற விதத்தில் வீட்டை மாற்றியமைத்திருக்கும் இந்தர்பால் குடும்பத்தினருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com