என்.ஆர்.காங்கிரசுடன் சுமுக உடன்பாடு: சபாநாயகர், அமைச்சர்கள் யார், யார்? சாமிநாதன், நமச்சிவாயம் பேட்டி

என்.ஆர்.காங்கிரசுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சபாநாயகர், அமைச்சர்கள் யார், யார்? என்பது பற்றி கட்சி தலைமை அறிவிக்கும் என சாமிநாதன், நமச்சிவாயம் கூறினர்.
என்.ஆர்.காங்கிரசுடன் சுமுக உடன்பாடு: சபாநாயகர், அமைச்சர்கள் யார், யார்? சாமிநாதன், நமச்சிவாயம் பேட்டி
Published on

புதுச்சேரி,

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் அமைச்சர்கள் பதவி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல். ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நமச்சிவாயம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஏம்பலம் செல்வம், கல்யாணசுந்தரம், ஜான்குமார், சாய்.சரவணன்குமார், விவிலியன் ரிச்சர்ட், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சபாநாயகர், அமைச்சர்களை தேர்வு செய்யும் முழு அதிகாரத்தை கட்சியின் தலைமைக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில் சாமிநாதன், நமச்சிவாயம் எம்.எல்.ஏ. ஆகியோர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் அமைச்சர்கள், சபாநாயகர் பங்கீடு சுமுகமாக முடிந்தது. பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் பதவியை தர உடன்படிக்கை ஏற்பட்டு உள்ளது.

பா.ஜ.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள், யார், யாருக்கு என்ன பதவி என்பது பற்றி கட்சி தலைமை அறிவிக்கும். இதற்காக மேலிட தலைவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச உள்ளனர்.

எங்கள் கூட்டணி 5 ஆண்டுகள் வலுவாக இருக்கும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கேட்டு பெறுவோம். மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம்.

எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தி.மு.க., காங்கிரஸ் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சபாநாயகர் பதவியை பா.ஜ.க. ஏன் குறிவைக்கிறது என நிருபர்கள் கேட்டபோது, நாங்களும் ஆளும் கட்சியில் ஓர் அங்கம் தான். என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்றார். நாங்கள் பொறுப்புகளை பங்கிட்டு கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தேனீ.ஜெயக்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோருக்கும், பா.ஜ.க.வில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஏம்பலம் செல்வம் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com