வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - கலெக்டர் விஷ்ணு ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - கலெக்டர் விஷ்ணு ஆய்வு
Published on

நெல்லை,

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த 16-ந் தேதி வெளியிட்டது. தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? என்று பொதுமக்கள் சரிபார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,475 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்ற முகாம்களில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியாகிற அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக படிவம் 6-யை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இதேபோன்று வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள இரட்டைப்பதிவு உள்ளவர்கள் பெயரை நீக்க படிவம் 7-ம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புகைப்படத்தை திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள் படிவம் 8-ம் பூர்த்தி செய்து வழங்கினர். இடமாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் படிவம் 8 ஏ-யை பூர்த்தி செய்து கொடுத்தனர். முகாமில் பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com