சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை - கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்றும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்தும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை - கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
Published on

பெங்களூரு, -

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் உள்ள எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடி உத்தரவிட்டு இருந்தார். மேலும் பெங்களூருவில் புத்தாண்டுக்கு முன்பாக வருகிற 31-ந் தேதி இரவு 11 மணிக்கு வழக்கம் போல மதுபான விடுதிகளை மூடிவிடும்படியும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கமாக பெங்களூருவில் புத்தாண்டை கொண்டாட அதிகாலை 2 மணிவரை அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் விஜய பாஸ்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக வரும் மக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும். மக்கள் அதிகஅளவு கூடுவதற்கு அனுமதி இல்லை. விழாக்காலங்களில் பொதுமக்கள் ஒன்று சேர்வதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை. மக்களை ஒன்று சேர்ந்து நடனமாடுவது, விருந்துகள் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 30-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 2-ந் தேதி வரை 4 நாட்கள் அமலில் இருக்கும். ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இவற்றை போன்று செயல்படும் மற்ற பொழுது போக்கு கடைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் 4 நாட்கள் பொருந்தும்.

இந்த 4 நாட்களில் ஓட்டல்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, அவர்களுக்கு பரிசோதனை நடத்துவது கட்டாயமாகும். இந்த விதிமுறைகளை கண்டிப்பாக நிர்வாகம் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு தினத்தில் பொது இடங்கள், முக்கியமான சாலைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் பொது இடங்கள், முக்கியமான சாலைகளில் மக்கள் எப்போதும் போல தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஒன்று கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனை சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம்.

புத்தாண்டுக்கு ஓட்டல்களுக்கு வழக்கம் போல வாடிக்கையாளர்கள் வருகை தந்தாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் பின்பற்றுகிறார்களா? என்பதை போலீசார், மாநகராட்சி உள்ளிட்ட அரசு அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com