ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Published on

ஊட்டி,

மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும்போது, ஆயிரக்கணக்கானோர் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். இதையடுத்து சீசனின்போது சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், தொடர் விடுமுறை காலங்களான கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு, பொங்கலையொட்டி ஊட்டி-கேத்தி இடையே வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நாளைக்கு 3 முறை ஜாய் ரைடு என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சிறப்பு மலைரெயில் காலை 9.40 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு கேத்திக்கு 10.10-க்கு சென்றடைந்து, அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வருகிறது.

பின்னர் காலை 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு கேத்திக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 1.10 மணிக்கு வந்தடைகிறது. மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தியை சென்றடைகிறது. 4 மணிக்கு கேத்தியில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு 4.30 மணிக்கு வருகிறது. இந்த சிறப்பு மலை ரெயிலில் ஒரு முதல் வகுப்பு பெட்டியும், 3 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. முதல் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.400, 2-வது வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.300-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு மலை ரெயிலில் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.100 மதிப்பு உள்ள தொப்பி, டீ, காய்கறி சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. 146 இருக்கைகள் உள்ளன. நேற்று வார விடுமுறை என்பதால், சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர். அவர்கள் கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசித்ததோடு, பெரிய குகை வழியாக மலை ரெயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத நினைவாக உள்ளது என்று தெரிவித்தனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) 3 முறை ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த ஜனவரி மாதம் 19-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. குன்னூர்-ரன்னிமேடு இடையே நாளை(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 19-ந் தேதி வரை(சனிக்கிழமை மட்டும்) சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இது குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு ரன்னிமேடுக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 1.30 மணிக்கு வந்தடைகிறது. இதில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 86 இருக்கைகள் இருக்கும். முதல் வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.450, 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.320 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com