பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் இன்றி நடந்தது

பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.
பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் இன்றி நடந்தது
Published on

அலங்காநல்லூர்,

கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் தங்களது குலதெய்வ கோவிலில் வழிபட்ட பின்னர் முருகன் கோவிலிலும் வந்து தவறாமல் வழிபட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனினும் கோவில்களில் நித்யகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று மூலவர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கள்ளழகர் கோவிலில் நேற்று காலையில் பங்குனி மாத திருக்கல்யாண விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்பிரகார மண்டப வளாகத்தில் திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இதனால் வியூக சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மதுரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு நடக்க இருந்த திருக்கல்யாணம் நேற்று நடைபெறவில்லை. ஆனால் பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடந்தது.

மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மேலும் நேற்று நடைபெற இருந்த பங்குனி உத்திர பூப்பல்லக்கு நிகழ்ச்சி தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் நாளானது தெய்வங்களின் திருமணம் நடந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு பங்குனி உத்திரம் நாளானது மகத்துவமான தெய்வீக நாளாகும்.

ஆனால் கொரோனா வைரசால் ஊரடங்கு பிற்பிக்கப்பட்டதையொட்டி கோவில்கள் மூடப்பட்டு விட்டன. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனையொட்டி பங்குனி உத்திரம் நாளான நேற்று சன்னதி தெரு வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் கோவில் வாசல் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர். கோவிலுக்குள் ஆகம விதிப்படி நித்ய பூஜைகள் மட்டும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com