ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
Published on

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருப்பார்கள். பின்னர் நேன்பை நிறைவு செய்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
அதன்படி, திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் தொழுகை நடத்தினார். இந்த தெழுகையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கெண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல், முகமதியாபுரம், ரவுண்டுரோடு உள்பட நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. அதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். அதேபோல் வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பழனி, நத்தம்
பழனி பெரிய பள்ளிவாசல் மற்றும் சண்முகநதி அருகே உள்ள பள்ளிவாசலில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. சண்முகநதி அருகே உள்ள பள்ளிவாசல் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை செய்தனர். மேலும் அங்கு வந்த ஏழைகளுக்கு பொருட்கள், பணம் ஆகியவற்றை தானமாக வழங்கினர். இந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொள்ள பழனி, நெய்க்காரப்பட்டியில் இருந்து கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் வந்தனர்.
நத்தம் கோவில்பட்டி கோரிமேடு ஈதுகா மைதானத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் நத்தம் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகெண்டனர். இதேபோல் வத்திபட்டி, பரளி, பெரியூர்பட்டி, கோசுகுறிச்சி, மேலமேட்டுபட்டி, சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். நத்தம் அருகே கணவாய்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானலில், நகரின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் புறப்பட்டு கலையரங்கம் பகுதியில் ஒன்றுக்கூடினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக பியர்சோழா அருவி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு வந்தனர். அதன்பிறகு அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதனை டவுன் பள்ளிவாசல் இமாம் யூசுப் நிகழ்த்தினார். இதில், இமாம்கள் சிக்கந்தர், காஜாமைதீன், முபாரக், அராபத், தமீம் அன்சாரி, சம்சுதீன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராஹிம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா, ம.தி.மு.க. நகர செயலாளர் தாவூத், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக், சுற்றுலா வந்த முஸ்லிம்கள் என பலர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதுடன், ஏழைகளுக்கு பணம், பொருட்களை தானமாக வழங்கினர்.
வேடசந்தூரில் ஜமாத் தலைவர் முகமதுகாசீம், செயலாளர் உமர்அலி, பொருளாளர் தையூப் ஆகியோர் முன்னிலையில் முஸ்லிம்கள், கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம், குடகனாறு பாலம், ஆத்துமேடு வழியாக பழனி சாலையில் உள்ள ஈதுகா மைதானத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு இமாம் முகமதுஇப்ராகிம் தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
இதுதவிர வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தெழுகை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com