

ஊட்டி
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஈஸ்டர் பண்டிகை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியுடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை தொடங்கியது. அப்போது பிறருடன் அன்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்து வாழ்தல், மன்னித்து வாழ்தல், சகோதரத்துவம் பேணுதல் உள்பட பல்வேறு கூற்றுகளை தேவாலய குருக்கள் போதித்தனர். நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நற்கருணை ஆசீர்
சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் இன்று அதிகாலை 5 மணி, காலை 8.30 மணிக்கு பங்குத்தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் மக்களின் பாடுகளை ஏற்றுக்கொண்டு மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து குறித்து நற்செய்தி கூறப்பட்டது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் புனித பவுல் பங்கு குரு ஆன்டனி டிக் ரோஸ் முன்னிலையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஆலய முற்றத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு புதிய நெருப்பு, புதிய பாஸ்கா தேன் மெழுகு திரி புனிதப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டது.
பின்னர் குரு கேண்டிலை ஆலயத்தினுள் எடுத்து சென்று மெழுகு திரியை ஏற்றி புதிய ஒளியை அர்ப்பணித்தார். தண்ணீரை புனிதப்படுத்தி தீர்த்தமாக அனைவரின் மேல் தெளித்தார். இதில் பங்கு குரு செல்வநாதன், உதவி பங்கு குரு அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு குரு அமிர்தராஜ், ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் பங்கு குரு ஜெரேமியா ஆல்பிரட், பிங்கர்போஸ்ட் ஐ.சி.ஆர்.எம். ஆலயத்தில் பங்கு குரு ராஜன் சாமுவேல் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. ஊட்டி புனித மரியன்னை ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம், புனித திரேசன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழமையான புனித மரியன்னை திருத்தலத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கு குரு ஞானதாஸ், உதவி பங்கு குரு பிராங்க்ளின் ஆகியோர் பிரார்த்தனை செய்து திருப்பலி நிறைவேற்றினர். காலை 7 மணிக்கு தமிழில் திருப்பலி, 9 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி மற்றும் 10 மணிக்கு மீண்டும் தமிழில் திருப்பலி நடைபெற்றது.