முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதேபோல் கீழப்பழுவூரில் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

அரியலூர்,

பங்குனி உத்திரத்தையொட்டி அரியலூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், மின்நகர் முருகன் கோவில், கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீர்க்கும் குமரன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து முருகனுக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி முருகன் கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூரில் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பெரிய தேரில் உற்சவமூர்த்திகளான அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாரும், மற்றொரு தேரில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், அம்பாள், வள்ளிதெய்வானை சமேத முருகன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர்.

மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, நாதஸ்வர இன்னிசையுடன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. அதன்பின் நடராஜர் தேர்க்காணல் உற்சவம் நடைபெற்றது.

பங்குனி உத்திர விழாவையொட்டி பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பெரம்பலூர் தெப்பக்குள கரையையொட்டிய அய்யப்பன்கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். பின்னர் கோவிலை அடைந்ததும் அங்கு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து பயபக்தியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com