பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு ஏற்பாடு; மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பேட்டி

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார்.
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு ஏற்பாடு; மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பேட்டி
Published on

தாம்பரம்,

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் கே.மிஸ்ரா, சென்னை புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நகராட்சிகள் மண்டல இயக்குனர் முஜிபுர்ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், பல்லாவரம் நகராட்சி ஆணையர் மதிவாணன், பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

அப்போது பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகரில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே.மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகளில் தாம்பரம், செம்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகியவற்றின் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாம்பரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 20 ஆழ்துளை கிணறுகள், செம்பாக்கம் நகராட்சியில் 12 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ.14 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில், பல்லாவரத்தில் ரூ.1 கோடியே 27 லட்சத்தில் 20 ஆழ்துளை கிணறுகளும், பம்மலில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் 8 ஆழ்துளை கிணறுகளும், அனகாபுத்தூரில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் 20 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்படும். இந்த பணிகள் 20 நாட்களுக்குள் முடிவடையும். அதன்பின்னர் இந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

மேலும் மேலச்சேரி, பழைய சீவரம் பகுதிகளில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் அனகாபுத்தூர், பல்லாவரம் நகராட்சிகளுக்கு பாலாற்று குடிநீர் கூடுதலாக கிடைக்கும். இந்த பணிகள் 15 நாளில் முடிவடையும். கல்குவாரி தண்ணீரை வாரத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்து வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறும்போது, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், செட்டிபுண்ணியம் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளின் தண்ணீரை நிரந்தரமாக பயன்படுத்துவது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. திரிசூலம் கல்குவாரியில் இருந்து பல்லாவரம் நகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த ரூ.27 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com