

வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா வரவேற்றார்.
கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை, தொழிலாளர்துறை மற்றும் சைல்டுலைன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
இந்த குழுவினர் புன்னகையை தேடி (ஆபரேஷன் ஸ்மைல்-2021) என்ற பெயரில் வாகனங்களில் சென்று குழந்தைகள் மீட்பு பணி வருகிற 15-ந் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதில், குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குனர் ராஜபாண்டியன், சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுபாஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் செல்லும் சிறப்பு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.