சூடு பிடிக்கும் சுட்டி சமையல்

‘பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆரோக்கியமான உணவு வகைகளை குழந்தைகளுக்கு தயார் செய்து கொடுக்க வேண்டும். அதோடு சிறுவர்- சிறுமியர்களுக்கு அத்தகைய உணவுகளை தயார் செய்யவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சூடு பிடிக்கும் சுட்டி சமையல்
Published on

இன்றைய இயந்திர யுகத்தில் அவசர அவசரமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை முறையாக சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோரும் துரித கதியில் இயங்கி, குழந்தைகளைப் போல் அவர்களும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. உயரமாக வளராதது, உடல்பருமன் பிரச்சினை, சுறுசுறுப்பின்றி மந்தமாக காணப்படுவது போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகளின் உணவுமுறை சிக்கலே காரணம். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கும், சாப்பிடும் உணவுக்கும் கூட சம்பந்தம் இருக்கிறது என்கிறார், பி.பிரியா பாஸ்கர்.

எம்.எஸ்சி. ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கும் இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். படித்த படிப்பும், அதை சார்ந்த பணியும் விதவிதமான சமையல் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அதிகப்படுத்தி சிறந்த சமையல் கலை நிபுணராக இவரை உருவாக்கியிருக்கிறது. இவருடைய கைவண்ணத்தில் வித்தியாசமான உணவு வகைகள் தயாராகின்றன. குழந்தைகளின் நலனுக்காகவே அடுப்பில்லாத சமையல் எனும் பிரத்தியேக உணவு வகைகளை உருவாக்கி இருக்கிறார். அவை சிறுவர்-சிறுமியர்களுக்கான ஆரோக்கியமான உணவு பதார்த்தங்களாக மட்டுமின்றி அவர்களே தயார் செய்து ருசித்து சாப்பிடும்படியாகவும் அமைந்திருக்கிறது.

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் வீடு திரும்புவதற்கு இரவாகிவிடும். அதனால் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் அவர்களுடைய பிள்ளைகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்ளும் நிலைதான் இருக்கிறது. பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு வகைகள் குழந்தைகள் உடல் நலனுக்கு கெடுதி விளைவிப்பவை. அவைகளை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிறு மந்தமாக இருக்கும். அதன் தாக்கமாக பசி எடுக்காது. குழந்தைகள் சுறுசுறுப்பையும் இழந்து சோர்ந்துவிடுவார்கள். அதனால் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள்.

பெற்றோர் இல்லாத நேரத்தில் குழந்தைகள் தாங்களாகவே சமைத்து சாப்பிடுவது கடினமான காரியம். அடுப்பை ஒழுங்காக பற்ற வைத்து சமைப்பார்களா? கியாஸ் கசிவு ஏற்பட்டுவிட்டால் என்ன ஆவது என்ற பதற்றம் பெற்றோரிடம் இருக்கும். அதனால் சிறுவர்- சிறுமியர்கள் சமைக்காமல் தயார் செய்யும் உணவு வகைகளை பற்றி ஆய்வு செய்தேன். அவை அவர்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில்கொண்டு பல வகை உணவுகளை உருவாக்கினேன். அவைகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களுக்கு சாப்பிட கொடுத்தேன். ருசித்து மகிழ்ந்தார்கள். அதை பார்த்ததும் அவரவர்களுக்கு விருப்பமான பதார்த்தங்களுடன் சத்தான பொருட்களை சேர்த்து மேலும் சுவையான பதார்த்தங்களை தயாரித்தேன். அதற்கு கிடைத்த உற்சாகம் குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த புதுப்புது ரெசிபிகளை உருவாக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது என்கிறார்.

நொறுக்குத் தீனிகளுக்கு இணையாக குழந்தைகளை கவரும் பலகாரங்களை தயார் செய்வது பற்றியும், அதில் இருக்கும் ஆரோக்கியமான விஷயங்கள் குறித்தும் பிரியா பாஸ்கர் விவரிக்கிறார்.

அவலை நிறைய பேர் ஒதுக்கிவிடுகிறார்கள். அதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. விரைவாக ஜீரணமாகும் தன்மை கொண்டது. பசியையும் தூண்டிவிடும். அவலுடன் கரும்பு சாறு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிடலாம். அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்தும் கொடுக்கலாம். அதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிட தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஒருபோதும் காபியிலோ, பாலிலோ வெள்ளை சர்க்கரையை கலந்து பருக கொடுக்கக்கூடாது. உணவு பதார்த்தங்களிலும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு கலந்து கொடுக்கலாம். ஏனென்றால் உடலில் உள்ள கால்சியத்துக்கு சர்க்கரை கேடு விளைவித்துவிடும்.

சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை பவுடராக்கி பயன்படுத்தலாம். அது உடலுக்கு குளுமை தரும். அதிகமாக தாகம் எடுப்பதை கட்டுப்படுத்தும். வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. உலர் திராட்சை ரத்த அணுக்களை அதிகப் படுத்தும் ஆற்றல் கொண்டது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மல சிக்கல் வராது. வால்நட் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது. எள்ளு பொடி, பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை போன்றவைகளை கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல், பனங்கற்கண்டு பவுடர் தூவி உருண்டையாக பிடித்துக் கொடுக்கலாம். சத்து மாவை வீட்டிலேயே தயார் செய்து அதனுடன் வெல்லம் மற்றும் நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்கள் கைப்படவே உணவு பதார்த்தங்களை செய்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் விரும்பி சாப்பிடுவார்கள் என்கிறார்.

குழந்தைகள், சிறுவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாவதற்கு சத்தான உணவு வகைகளை சாப்பிடாததே காரணம், அதில் பெற்றோருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பது பிரியா பாஸ்கரின் கருத்தாக இருக்கிறது.

காலையில் எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற மனநிலையும், பசிக்காக ஒப்புக்கு சாப்பிடுவதும் உடல் ஆரோக்கிய பிரச்சினைக்கு முதல் காரணமாகி விடுகிறது. பெற்றோரை பார்த்து பிள்ளைகளும் அதேபோன்று சாப்பிட பழக்கப்பட்டுவிடுகிறார்கள். வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கட்டாயம் கிடைத்தாக வேண்டும். ருசிக்காக நொறுக்கு தீனிகளுக்கு அடிமையாகி உடல் நலனை பாழ்படுத்திக் கொள்ளக் கூடாது. பள்ளியில் சக மாணவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் தொற்று வியாதி போல் மற்றவர்களுக்கும் பரவிவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததே அதற்கு காரணம். சளி, இருமல் இருந்தால் அவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டியதில்லை. ரசத்தில் தூதுவளை, நொச்சி தழை கலந்து சாப்பிடலாம். எல்லா சமையலிலும் காரத்திற்கு மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகை கொஞ்சம் கூடுதலாக சேர்க்க வேண்டும். மிளகு சளியை விரட்டி அடித்து விடும் என்கிறார்.

பிரியா பாஸ்கர் ஈரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோர்: புஷ்பநாதன்- பானுமதி. கணவர் பாஸ்கர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிரியா பாஸ்கர் குழந்தைகள் நலனில் அக்கறைகொள்வதற்கு சோகம் கலந்த பின்னணி ஒன்று காரணமாக இருக்கிறது. அதுபற்றி சொல்லும்போது அவருடைய கண்கள் கலங்குகின்றன.

திருமணத்திற்கு முன்பு கோர விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன். திருமண வாழ்க்கைக்கு பிறகும் விதி விளையாடியது. ஏழு மாத கர்ப்பிணியாக இரட்டை குழந்தைகளை கருவில் சுமந்தேன். அப்போது கவலைக்கிடமான நிலையில் இருந்த எனக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த மருத்துவம், குழந்தை விஷயத்தில் எதிர்மறையாகி விட்டது. குழந்தைகளை என் கரங்கள் அரவணைக்கும் முன்பே பறிகொடுத்துவிட்டேன். அந்த சோகம் என் மனதை உலுக்கி விட்டது. எல்லோரும் பரிதாபத்தோடு என்னிடம் நலம் விசாரித்தார்கள். அது துயரத்தை அதிகப்படுத்தியது. அதில் இருந்து மீள்வதற்கு நான் கற்ற சமையல் கலையை ஆயுதமாக்கினேன். நான் கற்ற சமையல் மற்ற குழந்தைகள் நலனுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் சுட்டிகளின் குட்டி சமையல் என்ற புத்தகம் எழுதினேன். சங்க இலக்கியங்களில் பாடல் வடிவில் குறிப்பிடப்பட்டுள்ள சமையல் முறைகளை விளக்கியும், முன்னோர்களின் உணவு பழக்கங்கள் குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அடுத்தகட்ட முயற்சியாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள முன்னோர்களின் உணவு பழக்கம் குறித்து ஆராய்ச்சி செய்ய இருக்கிறேன் என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com