ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.

திருவிழாவின் 8-ம் நாளன்று முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் அடுத்த மாதம்(மார்ச்) 5-ந் தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

திருமஞ்சனம்

9-ம் நாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி, இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com