ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

திருச்சி,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 14-ந் தேதி தொடங்கி ஜனவரி 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25-ந் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் சிவராசு பேசியதாவது:-

விழா நாட்களில் மாநகராட்சி சார்பில் சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். நடமாடும் கழிவறைகள், தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் அமைத்திட வேண்டும். அம்மா மண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டும்.

இலவச மருத்துவ உதவி

மின்வாரியத்தின் சார்பில் சீரான முறையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். ரெயில் நிலையத்தில் திருவிழா தொடர்பான விளம்பரங்களை அமைக்க ரெயில்வே துறை அனுமதிக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைக்க வேண்டும். அம்மா மண்டபம் படித்துறையில் ரப்பர் படகு மூலம் கண்காணித்திட வேண்டும். வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும். மேலும், போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திடவும், நெரிசலை கட்டுப்படுத்திடவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுசெய்து தரமான உணவு வகைகள் வழங்க வேண்டும்.

முககவசம் கட்டாயம்

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனம் செய்யஅனுமதித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம், ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com