ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆலங்குளம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வன்னியம்பட்டி விலக்கு வழியாக ஆலங்குளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆலங்குளம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வன்னியம்பட்டி விலக்கு வழியாக ஆலங்குளத்திற்கு சாலை உள்ளது. வன்னியம்பட்டி விலக்கில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையும், ஆலங்குளம் சாலை பிரியும் செங்கல்சூளை பஸ் நிறுத்ததில் சாலையில் வாருகால் வசதி இல்லாமல் இருப்பதால் அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் சாலையில் தேங்கி விடுகிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதேபோல் ஆலங்குளம் செல்லும் சாலையில் இனாம் கரிசல்குளம் கிராம அஞ்சலகத்தில் இருந்து இனாம் கரிசல்குளம் பஸ் நிறுத்தம் வரையிலான சாலையில் வாருகால் உயரமாகவும், சாலை தாழ்வாக உள்ளதாலும் சாலையில் நீர் தேங்கி சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது.

இந்த சாலையின் வழியாகவே ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆலங்குளம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இச்சாலை பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் சாலை சேதமடைந்து காணப்படுவதால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழிகள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, செங்கள் சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் வாருகால் அமைத்திடவும், இனாம் கரிசல்குளம் கிராம அஞ்சலக பகுதியில் சாலையை உயர்த்தி, குண்டும், குழியுமாக உள்ள சாலையை பழுது பார்த்திட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com