எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 97.33 சதவீதம் பேர் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 97.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 97.33 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டதால், அதன்படி இந்த ஆண்டும் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மாணவ- மாணவிகள் அதிகம் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவ- மாணவிகளின் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இணையதளம் மூலமாக அனுப்பப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை முதலே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு குறித்த விவரம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் தேர்வு முடிவு வெளியானதும் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தகவல்கள் ஒட்டப்பட்டன.

97.33 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 520 மாணவர்களும், 4 ஆயிரத்து 135 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 655 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 358 மாணவர்களும், 4 ஆயிரத்து 66 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 424 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.33 சதவீத தேர்ச்சி ஆகும்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவு குறித்த விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டன. இதேபோல் மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் குறித்து, அவர்களின் பெற்றோர் செல்போனில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது.

செல்போன் மூலம்...

இதனால் மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகளை செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. குறைந்த அளவிலான மாணவ- மாணவிகளை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு வந்ததை காண முடிந்தது. பின்னர் தகவல் பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டவுடன், அதனை அவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மதிப்பெண்கள் என்ன? என்பதை குறித்து கொண்டனர்.

இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சிலர் துள்ளிக்குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பள்ளிகளுக்கு வருகை தந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவ- மாணவிகள் தங்களது ஆசிரியர்களை சந்தித்து மதிப்பெண் விவரத்தை தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com