பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் புதுச்சேரியில் 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
Published on

புதுச்சேரி,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ந்தேதி நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், தேர்வு தொடங்காமலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், ஜூன் மாதம் 1-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்தது.

அந்த தேர்வும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15-ந்தேதி தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மாணவர்களின் நலன்கருதி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உயர்கல்விக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மேல்நிலை கல்வியில் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் முக்கியமாக இருக்கிறது.

அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் என்பது பள்ளி அளவில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அரசு கூறி இருந்தது.

அதன் அடிப்படையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொண்டனர்.

இதுதொடர்பாக புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது புதுவை மற்றும் காரைக்காலில் 16 ஆயிரத்து 485 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 8 ஆயிரத்து 268 பேர் மாணவர்கள். 8 ஆயிரத்து 217 பேர் மாணவிகள் ஆவர்.

புதுவை பகுதியில் 6 ஆயிரத்து 983 மாணவர்கள், 6 ஆயிரத்து 893 மாணவிகள் என 13 ஆயிரத்து 876 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். காரைக்கால் பகுதியில் 1,285 மாணவர்கள், 1,324 மாணவிகள் என 2 ஆயிரத்து 609 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுபவர்களில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை மாணவிகளைவிட மாணவர்களே அதிக அளவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிட்டதும், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதால், மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் அதனை தெரிவிக்க குறை தீர்க்கும் படிவத்தினை பள்ளிகள் வாயிலாக பூர்த்திசெய்து அனுப்ப அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com