எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: நரிக்குறவ மாணவ-மாணவிகளுக்கு நெல்லை கலெக்டர் பாராட்டு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவ மாணவ-மாணவிகளை நெல்லை கலெக்டர் ஷில்பா பாராட்டி பரிசு வழங்கினார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: நரிக்குறவ மாணவ-மாணவிகளுக்கு நெல்லை கலெக்டர் பாராட்டு
Published on

நெல்லை,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரை சேர்ந்த நரிக் குறவ மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி மாதவி 192 மதிப்பெண் எடுத்து உள்ளார். நெல்லை பேட்டையை சேர்ந்த அண்டனி-337, வினோத்-278, வித்யன்-241, ஜெயசூர்யா-219 மதிப்பெண்களும் எடுத்து உள்ளனர்.

வெற்றி பெற்ற நரிக்குறவ மாணவ-மாணவிகளை, மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் வரவழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கலெக்டர் பாராட்டினார்.

பின்னர் கலெக்டர் ஷில்பா கூறுகையில், நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் 152 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 271 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். இதில் 11 ஆயிரத்து 411 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதன் மூலம் 92.99 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்த வரையில் மாநில அளவில் 20-வது இடம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் பேட்டையை சேர்ந்த அண்டனி என்ற மாணவர் 337 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் களை பாராட்டுகிறேன். இவர் களின் மேல்படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அவர்களின் ஆங்கில திறனை அதிகரிக்க தனியார் நிறுவன உதவியுடன் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, வள்ளியூரை சேர்ந்த நரிக்குறவ மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவர் களை தனது காரில் அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com