எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 14-வது இடத்தை பிடித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

கரூர்,

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணியளவில் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை பார்ப்பதற்காக மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு காலை 8 மணியில் இருந்தே வரத் தொடங்கினர். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்கள், தோழிகளை பார்த்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர்.

தேர்வு முடிவு வெளியானதும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தகவலை ஆர்வத்துடன் மாணவர்கள் பார்த்தனர். இதையடுத்து தங்களது பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை சந்தித்த அவர்கள், மேல்படிப்பில் எந்த வகையான பாடப்பிரிவினை எடுத்து படிப்பது? என்பன உள்ளிட்டவை பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அந்த பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவிக்கப்பட்டதை காண முடிந்தது. எனினும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் வகைபடுத்தப்படுவது தவிர்க்கப்பட்டதால் பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தம் இன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதே போல் மாவட்ட மைய நூலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக மாணவர்களின் மதிப்பெண் நகல் எடுத்து கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உறுதிமொழி படிவத்தில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு வந்ததால் வீட்டிலிருந்தபடியே அதனை தங்களது பெற்றோருடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே பள்ளிகளுக்கு நேரில் சென்று மறைமுகமாக ரேங்க் அடிப்படையில் மாணவர்களுக்கு பரிசு ஏதும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் நடவடிக்கை இருக்கிறதா? என்பது பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக தேர்வு எழுதுவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசனை வழங்குமாறு அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறையினர் அறிவுறுத்தினர். எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 28-ந்தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ் மூர்த்தி கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 6,197 மாணவர்களும், 6,097 மாணவிகளும் என மொத்தம் 12,294 பேர் எழுதினர். இதில் 5,876 மாணவர்களும், 5,924 மாணவிகளும் என மொத்தம் 11,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.98 ஆகும். இது கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பது மகிழ்ச்சி தரும் ஒன்றாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு மாநில அளவில் 15-வது இடத்தினை பிடித்திருந்த கரூர் மாவட்டம் தற்போது ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்திற்கு வந்துள்ளது.

95 அரசு பள்ளிகளில் 5,930 மாணவ-மாணவிகள் த்-வு எழுதினர். இதில் 5,588 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.23 ஆகும். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளில் பார்வை குறைபாடுடைய 4 பேர் தேர்வெழுதி 4 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காது கேளாதோர், வாய் பேசாதோர் 8 பேர் தேர்வு எழுதியதில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதர வகை மாற்றுத்திறனாளிகள் 26 பேர் தேர்வு எழுதி 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடல் ஊனமுற்றோர் 15 பேர் தேர்வு எழுதி 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 192 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 33 அரசு பள்ளிகள், 1 நகராட்சி பள்ளி, 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 6 நிதி உதவிபெறும் பள்ளிகள், 6 சுயநிதி பள்ளிகள், 43 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 93 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகள் குறித்து வரும் காலங்களில் கணக்கெடுத்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com