போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்

பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே வசித்து வருபவர் மஞ்சு என்கிற கன் மஞ்சா (வயது 40), ரவுடி. இவர், மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, தாக்குதல் உள்பட 10 வழக்குகள் உள்ளன. மஞ்சுவின் பெயர் யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இதற்கிடையே யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தும் கேசவ் என்பவரிடம் கடந்த 16-ந் தேதி ஆயுதங்களை காட்டி மிரட்டி மஞ்சு பணத்தை கொள்ளையடித்திருந்தார். இதுகுறித்து கேசவ் கொடுத்த புகாரின் பேரில் யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரவுடி மஞ்சுவை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அதே நேரத்தில் மற்றொரு கொள்ளை வழக்கில் மஞ்சுவை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜாலஹள்ளி அருகே உள்ள தொழிற்சாலையில் ரவுடி மஞ்சு பதுங்கி இருப்பது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனித்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், சக போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது தொழிற்சாலை அருகே சுற்றி திரிந்த மஞ்சுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

பின்னர் மஞ்சுவை பிடிக்க போலீஸ்காரர் பைரேஷ் முயன்றார். அப்போது திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் பைரேசை குத்திவிட்டு அங்கிருந்து மஞ்சு ஓட முயன்றார். இதில், பைரேசின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் புனித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு மஞ்சுவை சரண் அடைந்து விடும்படி கூறி எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் ரவுடி மஞ்சு சரண் அடைய மறுத்து விட்டார். மாறாக அங்கிருந்த போலீஸ்காரர்களை கத்தியால் குத்த முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடுவதற்கும் முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் புனித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி மஞ்சுவை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தார். பின்னர் மஞ்சுவை பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு, போலீஸ்காரர் பைரேஷ், ரவுடி மஞ்சு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com