நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கர்நாடகத்தில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

கர்நாடகத்தில் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்றும், மேலும் தொழில் தொடங்க வசதியாக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கர்நாடகத்தில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா 6 நாள் பயணமாக சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெரு முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, கர்நாடகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

இந்த பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் எடியூரப்பா பெங்களூருவுக்கு வந்தார். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து பயணம் குறித்து நேற்று எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு வந்துள்ளேன். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தேன்.

அந்த அழைப்பை பல்வேறு நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க வசதியாக கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். விவசாய நிலத்தை விவசாயம் சாராத பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க காலஅளவு 60 நாட்களாக உள்ளது. இதை 30 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான சட்ட திருத்த மசோதா வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைசாளர முறையில் 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும்.

கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதற்காக ஆட்சி நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். அதிக தொழில்கள் கர்நாடகத்திற்கு வருவதால் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் இளைஞர்கள் பயன் அடைவார்கள்.

ஒருவித தயக்கத்துடனேயே தாவோசுக்கு சென்றேன். ஆனால் அங்கு சென்ற பிறகு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மேற்கொண்ட தாவோஸ் பயணம் நல்ல பலனை கொடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு கர்நாடகத்திற்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு கர்நாடகத்தில் நடக்கிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் முதலீடுகள் குவியும் என்ற எங்களின் கனவு நனவாகும். 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினேன். பெங்களூரு தவிர்த்து பிற மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com