புதிதாக அரசு பள்ளியை தொடங்க உத்தரவிட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை மனு

145 குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருக்க புதிதாக அரசு பள்ளியை தொடங்க உத்தரவிடவேண்டும் என கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
புதிதாக அரசு பள்ளியை தொடங்க உத்தரவிட வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை மனு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டு பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் சுகாதார கேடு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என கோரி தே.மு.தி.க. வட்டசெயலாளர் ஆரோக்கியம் மனு கொடுத்தார். தொட்டியம் தாலுகா அரங்கூர் கிராமத்தினர், தங்களது கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை பழுது நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

வையம்பட்டி ஒன்றியம் அமயபுரம் என்ற கிராமத்தில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த நேரு நினைவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியானது பள்ளி நிர்வாகியின் விலகல் கடிதத்தினால் மூடப்பட்டு உள்ளது. ஜூன் 1-ந்தேதி பள்ளி தொடங்கப்பட்டு விட்டதால் இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வைத்து வகுப்புகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அறிய கல்வி துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புதிய இடத்தில் அரசு பள்ளி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 145 குழந்தைகளின் கல்வி தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் புதிதாக அரசு பள்ளியை தொடங்க உத்தரவிடவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த கருப்பையா என்பவர், தனது மகள் கிருத்திகாவை (வயது37) ஒரு புகார் மனு தொடர்பாக போலீசார் அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். கிருத்திகாவின் மகன் பிரவீன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். எனது மகளை சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கிய நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் கொடுத்த மனுவில், திருச்சி விமான நிலையம், செம்பட்டு, திருவளர்ச்சி பட்டி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளினால் நிலத்தடி நீராதாரம் பாதித்து விட்டது. எனவே அந்த பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. சமூக நீதி பேரவை சார்பில் அதன் செயலாளர் ரவிக்குமார், துரைக்குடி, முடிகண்டம் ஊராட்சி பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் சட்ட விரோதமாக மணல் எடுத்து செல்லப்படுகிறது. இரவில் நடைபெறும் இந்த மணல் கடத்தலை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

பூலாங்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண், தனது 3 வயது மகளை தனியார் குழந்தைகள் காப்பகம் சட்ட விரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்து தனது மகளை மீட்டு தரவேண்டும் என கோரி மனு கொடுத்தார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 496 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

கூட்டத்தில் நரிக்குறவர் களுக்கு தொழில் மானிய உதவித் தொகை, கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்கான காசோலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com