6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
Published on

சேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம் ஸ்ரீசுவாமி மெட்ரிக் பள்ளி, மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முதன்மை விடைத்தாள் திருத்தும் மையங்களும், உடையாப்பட்டி நோட்ரி டேம் பள்ளி, கொளத்தூர் எம்.ஏ.எம். மெட்ரிக் பள்ளி மற்றும் ஆத்தூர் பாரதியார் பள்ளி ஆகியவற்றில் துணை மையங்களும் என மொத்தம் 6 இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இந்த மையங்களில் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் 266 முதன்மை தேர்வாளர்கள், 266 ஆய்வு அலுவலர்கள், 1,544 உதவி தேர்வாளர்கள், 275 இதர பணியாளர்கள் என மொத்தம் 2,351 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பணிக்கு வரும் ஆசிரியர்களின் வசதிக்காக 23 வழித்தடங்களில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவருக்கும் வாசலிலேயே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தலா 3 முக கவசம் மற்றும் சானிடைசர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் 8 ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தலைமையில் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com