அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் புதிய கலெக்டர் ஜெயகாந்தன் பேட்டி

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் புதிய கலெக்டர் ஜெயகாந்தன் பேட்டி
Published on

சிவகங்கை,

சென்னையில் எழுது பொருள் அச்சக துறையில் இயக்குனராக இருந்த ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதனால் ஏற்கனவே இங்கு கலெக்டராக இருந்த லதா சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய கலெக்டராக நியமிக்கபட்ட ஜெயகாந்தன் நேற்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவரிடம் கலெக்டர் லதா பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்றதும், ஜெயகாந்தனுக்கு, கலெக்டர் லதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் புதிய கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. எனவே விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

புதிய கலெக்டர் ஜெயகாந்தனின் சொந்த ஊர் சென்னை ஆவடி. எம்.எஸ்.சி. விவசாயம் படித்த ஜெயகாந்தன், காஞ்சீபுரத்தில் வேளாண்மை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ஊரக வளர்ச்சித்துறையில் கோட்ட வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்துள்ளார். பின்னர் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று நெல்லைகோட்டாட்சியராகவும், காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து புள்ளியியல் துறையிலும் அவர் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி, தற்போது எழுதுபொருள் மற்றும் அச்சக துறையில் இயக்குனராக பணிபுரிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com