செல்லூரில் கபடி வீரர்கள் சிலை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

செல்லூரில் கபடி வீரர்கள் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
செல்லூரில் கபடி வீரர்கள் சிலை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
Published on

மதுரை,

மதுரை மாநகராட்சி விளாங்குடியில் ரூ.42 லட்சம் செலவில் சத்துணவுக்கூடங்கள் மற்றும் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மேற்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து விளாங்குடி சொக்கநாதபுரம் 1- வது தெருவில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சமுதாய கூடத்தில் உட்புறம் சுமார் 100 நபர்கள் அமரலாம். முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மேலும் அதில் மணமகள் மற்றும் மணமகன் அறை என தனித்தனியாக உள்ளது. மேலும் மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் தண்ணீர் கழிப்பறை வசதியும் உள்ளது.

மேலும் விளாங்குடி மெயின் ரோட்டில் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடங்களில் 20 குழந்தைகள் அமர்ந்து படிக்க தேவையான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமயலறை வசதி, பொருட்கள் வைப்பு அறை, கழிப்பறை வசதி, மின்விளக்குகள் வசதி போன்றவையும் உள்ளது. 23-வது வார்டில் 17 பணிகள் மொத்தம் ரூ.3 கோடியே 5 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.80 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் நடந்து வருகிறது. ரூ.64 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலான 3 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காத வகையில் இருகரைகளிலும் 10 கிலோ மீட்டர் அளவிற்கு கரைகள் அமைத்து தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகரில் உள்ள ஒவ்வொரு ரவுண்டானாக்களில் பல்வேறு பாரம்பரிய சின்னங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. செல்லூர் ரவுண்டானா ரூ.42 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மையத்தில் கபடி வீரர்களின் சிலை அமைக்கப்பட உள்ளது. செல்லூர் பகுதியில் அதிக அளவில் கபடி வீரர்கள் இருப்பதால் அவர்களை பாராட்டும் வகையில் இங்கு கபடி வீரர்கள் சிலை அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் அமைச்சர் பேட்டி கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். சிலர் முண்டி அடித்து முன்னேறினர். அப்போது ரவுண்டானாவில் பாதாள சாக்கடைக்காக கட்டப்பட்டு இருந்த குழி மீது போடப்பட்டு இருந்த டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்தது. அதனால் அதன் மீது நின்று இருந்த சிலர் கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை தூக்கி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com