இயற்கை வளத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தெள்ளானந்தல் கிராம மலையில் இயற்கை வளத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இயற்கை வளத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின்போது பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா தெள்ளானந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தெள்ளானந்தல் கிராமத்தில் அழகான மலை ஒன்று உள்ளது. இந்த மலையில் ஆயிரக்கணக்கான மரங்களும், அதிக அளவில் செடிகளும் உள்ளன. துரிஞ்சாபுரம் ஒன்றியத்தின் சார்பாக வனத்துறையிடம் அனுமதி பெற்று தேக்கு, பூவரசு போன்ற பல வகையாக மரங்களும், செடிகளும் நட்டு அதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தண்ணீர் ஊற்றி கடந்த 3 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டு திருவண்ணாமலை கலெக்டர் தலைமையில் கல்லூரி மாணவர்களை வைத்து மரக்கன்று விதைகள் நடப்பட்டன. இந்த மலையை மின்சார வாரியம் தங்களுக்கு துணை மின்சார அலுவலகம் அமைக்க 7 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது என்று வருவாய்த் துறையிடம் கேட்டு உள்ளார்கள். அங்கு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டால் பல்லாயிரக்கணக்கான மரங்களை இழந்து மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே எங்கள் கிராம மக்களின் இயற்கை வளங்களை காப்பாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருகில் உள்ள கொளக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக தொட்டியில் இருந்து பாதி பேருக்கு தண்ணீர் வருகிறது. மீதி பாதி பேருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. போதிய தண்ணீர் இல்லாமல் நாங்கள் அவலநிலைக்கு தள்ளி உள்ளோம். பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தண்ணீர் பிரச்சினை குறித்து திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com