ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை 20 நாட்களில் அகற்ற நடவடிக்கை - கலெக்டர் மலர்விழி பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் குடிமராமத்து பணி நடக்கும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 20 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.
ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை 20 நாட்களில் அகற்ற நடவடிக்கை - கலெக்டர் மலர்விழி பேட்டி
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் 10 ஏரிகளில் ரூ.5 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோகத்தூர் ஏரி, புலிக்கல் ஏரி, சிக்கதிம்மனஅள்ளி ஏரி, கொளநச்சியம்மன் ஏரி ஆகியவற்றில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் மலர்விழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சம்பந்தப்பட்ட ஆயக்கட்டு பாசன பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் பேசிய கலெக்டர், சீமைகருவேலமரங்கள், முள்மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்ட ஏரிகளில் மீண்டும் கருவேலமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வளராமல் கண்காணிப்பு பணி மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். அவ்வப்போது சீரமைப்பு பணி மேற்கொள்ளும் தேவை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் ஊரக வேலை உறுதிதிட்டம் மூலம் அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் கலெக்டர் மலர்விழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகளில் உள்ள சீமைகருவேலமரங்களை அகற்றுதல், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல், உபரிநீர் வரும் கால்வாய்கள், மதகுகள், பாசன கால்வாய்கள், கண்மாய்கள், கலிங்குகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணிகளை ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் தொடங்கி பொதுப்பணித்துறையின் நீர்வள நிலஆதார அமைப்புடன் இணைந்து 10 சதவீத நிதி பங்களிப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள்.

குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏரிகளில் மழைநீரை சேகரிக்க முடியும். இதன்மூலம் அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருப்பு அதிகரிக்கும். இதன்மூலம் வறட்சி நீங்கி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான தண்ணீரை பெற வாய்ப்பு உருவாகும். தற்போது 30 சதவீத குடிமராமத்து பணிகள் முடிவடைந்து உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

குடிமராமத்து பணிகள் நடைபெறும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அன்னசாகரம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை 20 நாட்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது மாற்று இடம் இல்லாதவர்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் நிலம் மற்றும் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார். இந்த ஆய்வின்போது குடிமராமத்து பணி நடக்கும் ஏரிகள் அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதன் மூலம் மழைநீர் ஏரிகளில் தேங்கி குடிநீர் பிரச்சினை தீரும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரஅமைப்பு செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், மோகனபிரியா, வெங்கடேஷ், சேதுராஜன் மற்றும் பாசன விவசாயிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com