தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

தனியார் வங்கியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
Published on

விசாரணை

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் ஊராட்சியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் பட்டரைப்பெருமந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளனர்.

அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு பதிலாக அதிகப்படியான தொகை வரவு வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டுள்ளனர். அவர் எந்த பதிலும் சொல்லாமல், பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கு 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் பாதிக்கப்பட்ட பட்டரைபெரும்புதூரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 40) என்பவர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தான் மறைத்துக் கொண்டுவந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அவரை பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com