

நாகர்கோவில்,
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை மாதம் ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும். மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து குடும்பத்தினருக்கும் ஏ.ஏ.ஒய். குடும்ப அடடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அருள், தங்க குமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மனோகர ஜஸ்டஸ் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.