

சென்னிமலை,
சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டான மணிமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் உப்பிலிபாளையம் ரோட்டுக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் மணிமலை பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் வரிசையாக நின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், மணிமலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் வசிக்கும் நாங்கள் குடிநீர் வரியாக ரூ.50 செலுத்தி வந்தோம். தற்போது குடிநீர் வரி 3 மடங்காக உயர்ந்து ரூ.150 செலுத்தி வருகிறோம்.
இவ்வளவு வரி செலுத்தியும் கடந்த 15 நாட்களாக எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதனால் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
அதற்கு பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், குடிநீர் சீராக கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உடனடியாக குடிநீர் வழங்கும் வகையில் லாரிகளில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குழாய் அமைத்து சீராக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். காலை 8 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் செல்லத்தொடங்கின. பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.