செம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; பேச்சுவார்த்தைக்கு சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்-பரபரப்பு

செம்பட்டி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்; பேச்சுவார்த்தைக்கு சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்-பரபரப்பு
Published on

செம்பட்டி,

செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சி பகுதிகளுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஆத்தூர் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.

அத்துடன் கடந்த சில மாதங்களாக மறியல், முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அதன் பின்னரும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆத்தூர் நத்தனார் தெரு, சவேரியார் தெரு, பூஞ்சோலை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சித்தையன்கோட்டை-செம்பட்டி சாலையில் குடிநீர் கேட்டு நேற்று காலை 9 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மறியல் போராட்டம் குறித்த தகவலறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காமராஜர் அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீரை கொண்டுசெல்வதற்காக பதிக்கப்பட்ட குழாயை உடைக்க முயன்றனர். அதனை அதிகாரிகள் தடுத்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பொதுமக்களை சமாதானப்படுத்தினார்.

ஆனாலும் குடிநீர் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் பகுதிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சித்தையன்கோட்டை- செம்பட்டி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com