குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கக்கோரி குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
Published on

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே நறுமணம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறு வறண்டதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலைய ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தடைபட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

பொது மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு குடங்களுடன் அலைந்து திரிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் பொது மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் நறுமணம் கிராமத்தில் குடிநீர் திட்டப்பணியை தொடங்க நிதி ஒதுக்கினார்.

இதையடுத்து நறுமணம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். 500 அடி வரை ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் நேற்று 400 அடி வரை மட்டும் ஆழ்துளை அமைத்து விட்டு, குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் பணியை தொடங்க முயற்சி செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிநீர் திட்டப்பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இங்கு குடிநீர் பிரச்சினை இனி வராமல் இருக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி 500 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணியை மேற்கொண்டு தொடங்க விடமாட்டோம் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அதிகாரி இந்திராதேவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், மேற்கொண்டு 50 அடி ஆழ்துளை அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு ஆழ்துளை அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com