

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது ஆரம்பாக்கம். இது தமிழக-ஆந்திர எல்லை பகுதி ஆகும். இங்கு போலீஸ் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் இயங்க கூடிய போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்துவதை தடுக்கவும், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகள், கஞ்சா, பிற கடத்தல் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வருவதை தடுக்கவும், சென்னைக்குள் சந்தேகத்திற்கு இடமான நபர்களுடன் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்வதிலும் மேற்கண்ட போலீஸ் சோதனை சாவடிக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த சோதனை சாவடியையொட்டி அமைந்து உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையானது ஆந்திரா மற்றும் ஆந்திரா வழியாக வடமாநிலங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலை ஆகும். இந்த நிலையில் மணல் கடத்தி வரும் லாரிகளை மடக்கி பிடிக்கும் ஆரம்பாக்கம் போலீசார், அவற்றை மாதக்கணக்கில் ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக நிறுத்தி விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
போலீஸ் சோதனைச்சாவடியையொட்டி சாலையின் ஒருபுறமாக பிடிபடும் மணல் லாரிகள் நிறுத்தப்படுகிறது என காரணம் கூறினாலும் அது தேசிய நெடுஞ்சாலையின் எல்லைக்குள் வரும் ஆபத்தான பகுதியாக உள்ளது. மேலும், அவ்வாறு நிறுத்தப்படும் லாரிகளை யாரும் கடத்திச்சென்று விடக்கூடாது என்பதற்காக அவற்றின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி விட்டு நிறுத்தப்படுகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் தேவையின்றி நிரந்தரமான தடையை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இரவு நேரத்தில் ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சென்னையை நோக்கி மிக வேகமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் இத்தகைய மணல் லாரிகளால் விபத்துக்கு உள்ளாகி உயிர்சேதம் ஏற்படும் அவல நிலையும் உள்ளது.
பிடிபட்ட மணல் லாரிகளை மாதக்கணக்கில் நிறுத்துகின்ற சூழலில் அவற்றை சர்வீஸ் சாலையிலோ அல்லது போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள காலி இடத்திலோ நிறுத்துவதற்கு ஆரம்பாக்கம் போலீசார் முன்வரவேண்டும். இதனால் பெரும் விபத்துகள் தடுக்கப்படும்.
இதற்குரிய உடனடி நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுத்திட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்கள் உள்பட அனைவரின் கோரிக்கையாக உள்ளது.