நிசர்கா புயல்: ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி?

நிசர்கா புயல் ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நிசர்கா புயல்: ஆபத்தில் இருந்து மும்பை தப்பியது எப்படி?
Published on

மும்பை,

அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. அரபி கடலில் உருவான 'நிசர்கா' புயல் சுமார் 120 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கொரோனாவின் கோர பிடியில் சிக்கி உள்ள மும்பைக்கு நிசர்கா புதிய தலைவலியானது.

எனினும் நிசர்காவால் ஏற்படும் இழப்புகளை தடுக்க மும்பையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு இருந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனா.

மும்பை மாநகராட்சி முன் எச்சரிக்க பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது.

மும்பை நகரில் மணிக்கு 49.5 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக கொலபா வானிலை ஆய்வு மையமும், புறநகரில் 22.2 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக சாந்தாகுருஸ் வானிலை ஆய்வு மையமும் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் மும்பை பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது. மும்பையை பொறுத்தவரை பல இடங்களில் மரங்கள் சாய்தன. எதிர்பார்த்தபடி மிகப்பெரிய சேதங்கள் ஏற்படவில்லை.

இந்தநிலையில் மும்பை ஆபத்தில் இருந்து தப்பியது குறித்து ஸ்கைமட் என்ற தனியார் வானிலை தகவல் நிறுவன அதிகாரி கூறுகையில், புயல் மும்பையை 120 கி.மீ. வேகத்தில் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் அலிபாக்கின் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. மும்பையை பொறுத்தவரை இது எப்போதும் பெய்யும் பருவ கால மழை போன்றது தான் என்றார்.

நிசாகா புயல்வடக்கு நோக்கி நகர்ந்து இருந்தால் மும்பைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என மற்றொரு அதிகாரி கூறினார்.

71 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை மிரட்டிய புயல்
மும்பையை கடந்த 1948-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி புயல் ஒன்று தாக்கியது. அதன்பிறகு மும்பையை பெரிய அளவில் புயல் எதுவும் தாக்கவில்லை. இந்த நிசர்கா புயலும் மும்பையை பெரிய அளவில் தாக்காமல் திசைமாறி உள்ளது. இந்தநிலையில் 1948-ம் ஆண்டு மும்பை புயலை பார்த்த புனேயை சேர்ந்த சுசித்தா (வயது81) என்ற மூதாட்டி கூறியதாவது:- மும்பையை புயல் தாக்கிய போது நாங்கள் வில்லேபார்லே பகுதியில் வசித்து வந்தோம். எனக்கு நினைவு இருக்கிறது அந்த புயலால் பெரிய, பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. பூங்காக்கள் அழிந்தன. அப்போது எனக்கு 10 வயது தான். மரங்கள், செடி கொடிகள் அழிந்ததை நினைத்து எனது தாய் மனது உடைந்து போனார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பம்பாயாக இருந்த மும்பை நவம்பர் 22-ந் தேதி 20 மணி நேரம் வீசிய சூறாவளி காற்றால் முற்றிலும் முடங்கியது. விடாமல் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின என மற்றொரு முதியவர் கூறினார். அப்போதைய புயலில் 7 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com