

பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு முன் பகுதியில் ஓட்டல் இயங்கி வருகிறது. அந்த ஓட்டலுக்கு பர்தா அணிந்த ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் (இளம் ஜோடி) நேற்று மதியம் வந்தனர். அப்போது அந்த வாலிபர் தங்கும் விடுதி காவலாளியிடம் தங்குவதற்கு அறை வேண்டும் என்று கூறினார்.
அப்போது திடீரென அந்த விடுதிக்கு 10 மோட்டார் சைக்கிள்களில் 15 மர்ம நபர்கள் வந்தனர்.
தங்குவதற்கு அறை கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கினர். அவருடன் பர்தா அணிந்து வந்த பெண் வெளியே வந்து சாலையில் ஓட முயன்றார். இதை பார்த்த மர்ம நபர்கள் அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த மர்மநபர்கள் இளம்ஜோடியை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தங்கும் விடுதியில் அறை கேட்ட வாலிபர் யார்? பர்தா அணிந்து வந்த பெண் யார்? மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் யார்?
எதனால் அவர்களை தாக்கி கடத்தி சென்றனர் என்று விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பட்டப்பகலில் இளம் ஜோடியை தாக்கி கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.