சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை விற்காவிட்டால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை விற்கா விட்டால் இனிப்பு கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துளளார்.
சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை விற்காவிட்டால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
Published on

உரிமம் பெற்று வினியோகம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நமது நாட்டில் அனைத்து விதமான விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அன்பாக அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கான https://foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமான முறையில்

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு குறிப்பிடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவுசெய்து உரிமம் பெற்று தயாரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புகார்கள் ஏதேனும் இருப்பின்

பொதுமக்கள் பண்டிகை காலத்தில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

மேலும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com