வேலை நிறுத்த போராட்டம்: கைதான 4 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கைதான 4 ஆசிரியர்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம்: கைதான 4 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்
Published on

நாகர்கோவில்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்திலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் தீவிரமாக நடந்தது.

இதையொட்டி 25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய 4 ஆசிரியர்கள் மற்றும் 2 அரசு ஊழியர்களை நேசமணிநகர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு உள்ளது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கைதான 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் தியாகராஜன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக பொதுச்செயலாளர் பெனின் தேவகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், பொருளாளர் சுமஹாசன் ஆகிய 4 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பெனின் தேவகுமார் பணிஇடை நீக்கத்துக்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் பிறப்பித்தார். தியாகராஜன் மற்றும் சுமஹாசன் ஆகியோருக்கான உத்தரவை நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன் பிறப்பித்தார். செந்திலுக்கான உத்தரவை தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி நடராஜன் பிறப்பித்து உள்ளார்.

இதே போல கைதான 2 அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com