தண்டவாளத்தில் விழுந்த மண்சரிவு அகற்றம்: நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம்

தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
தண்டவாளத்தில் விழுந்த மண்சரிவு அகற்றம்: நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம்
Published on

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் இரணியல் அருகே நெய்யூர் சந்திப்பு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென மண்சரிந்து விழுந்தது. இதனால் திருவனந்தபுரம்-நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே தண்டவாளத்தில் இருந்து மண்சரிவை அப்புறப்படுத்த நேற்றுமுன்தினம் காலையில் இருந்து ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டதால் நேற்று காலையில் மண்சரிவை அப்புறப்படுத்தினர். மேலும் மீண்டும் மண்சரிந்து விழாமல் இருப்பதற்காக தற்காலிகமாக அந்த பகுதியில் மண்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டன.

இதனையடுத்து மண்சரிவு ஏற்பட்ட தண்டவாள பகுதியில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ரெயிலை இயக்கும் அளவுக்கு தண்டவாளம் உறுதியாக உள்ளதா? என்பதை சோதித்தனர். பின்னர் அந்த வழியாக ரெயில்களை இயக்கலாம் என்று அறிவித்தனர்.

தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மேல் அந்த வழியாக மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. முதன் முதலாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக சென்றது. எனினும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு கருதி ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

மண் சீரமைப்பை தொடர்ந்து 3 மணி நேரம், 4 மணி நேரம் தாமதமாக அனைத்து ரெயில்களும் இந்த வழியாக இயக்கப்பட்டன. காலையில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது என்று ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படக்கூடிய ரெயில்கள் நாகர்கோவில் வழித்தடத்தில் நெல்லை மார்க்கமாக இயக்கப்பட்டன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com