கடல் பகுதியில் பலத்த காற்று: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தம்

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
கடல் பகுதியில் பலத்த காற்று: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தம்
Published on

தூத்துக்குடி,

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் 2.9 மீட்டர் முதல் 4.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தந்த கிராமங்களில் உள்ள ஆலயங்களில் அறிவிப்பு செய்யப்பட்டதுடன், மீன்பிடி இறங்குதளங்கள், மீன் ஏலக்கூடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளிலும் விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை மீறி கடலுக்கு செல்பவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுழற்சி முறையில் விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன. வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com