‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மை எரிப்பு

‘நீட்’ தேர்வுக்கு எதிராக கரூரில் தம்பிதுரை வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மை எரிப்பு
Published on

கரூர்,

கரூர் ராமானுஜநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் வீடும், அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில் மாணவி அனிதாவின் சாவிற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வு தமிழகத்திற்கு வராது என வாக்குறுதி அளித்ததை கண்டித்தும் தம்பிதுரையின் வீட்டை நேற்று மதியம் 1.15 மணி அளவில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் தரையில் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அப்போது திடீரென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

33 பேர் கைது

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மைகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வராது என தம்பிதுரை ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது வீட்டை முற்றுகையிட்டதாகவும், நீட் தேர்வு வர உடந்தையாக இருந்ததால் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது தம்பிதுரையின் வீட்டில் யாரும் இல்லை. அலுவலகத்தில் பெண் பணியாளர் ஒருவர் மட்டும் இருந்தார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

தொடர்ந்து போராட்டம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தம்பிதுரை வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com