வீடு–கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு–கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம்.
வீடு–கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
Published on

நாகர்கோவில்,

திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 51 சென்ட் நிலம் பார்வதிபுரம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் பலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர் கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வருவதாகக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் 3 வீடுகள் மற்றும் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரே கட்டிடத்தில் வீடு மற்றும் கடை கட்டியிருந்த நபர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருநெல்வேலியில் உள்ள இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் கோர்ட்டில் விசாரணையும் நடந்து வந்தது. இந்தநிலையில் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட வீடு மற்றும் கடையை அகற்ற உத்தரவிட்டது. இதுதொடர்பான கோர்ட்டு நோட்டீசும் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், வக்கீல் ஆறுமுகப்பெருமாள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பார்வதிபுரத்தில் உள்ள வீடு மற்றும் கடைக்கு சீல் வைக்கச் சென்றனர். ஆனால் அந்த வீட்டில் இருந்த பெண் வீட்டை உள்புறமாக பூட்டிக்கொண்டு சீல் வைக்க அனுமதிக்கவில்லை. அவருக்கு ஆதரவாக முன்னாள் கவுன்சிலர் உதயகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் திரண்டு வந்து வீட்டு முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்துழைக்கவில்லை. இதனால் போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. இறுதியில் அப்பகுதி மக்கள் வேறு வீடு பார்த்து பொருட்களை மாற்ற 10 நாள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். அதன்பேரில் வருகிற 25ந் தேதி வரை காலஅவகாசம் அளித்தனர். அதற்குள் வீடு மற்றும் கடையை காலி செய்யாவிட்டால் மீண்டும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை 11.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com