உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை

பள்ளிபாளையம் அருகே உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை
Published on

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், மலப்பாளையம், ஏமப்பள்ளி, காடச்சநல்லூர், பட்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே படவீடு பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் கூட்டியக்கத்திற்கு பெருமாள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்த இயக்கத்தில் இருந்து, கொங்கு ராஜாமணி தலைமையில் மற்றொரு விவசாய இயக்கத்தினர் தனியாக பிரிந்து, விவசாய நிலங்களின் பாதிப்பிற்கு இழப்பீட்டு தொகை அதிகளவு வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இரு தரப்பினரும் நேற்று காலை பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகே உள்ள பயணியர் விடுதியில் அமைச்சர் தங்கமணியை சந்தித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்பின்னர் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

இழப்பீட்டு தொகை அதிகளவு வேண்டும் என்று கேட்கிறார்கள். அதிகளவு தொகையை அளித்தால் அது மக்கள் மீது தான் சுமையாக விழும். மின்கட்டண உயர்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

தென்னை மரத்திற்கும், விளைநிலங்களுக்கும் அரசு அறிவித்த தொகை போதாது என்று, கொங்கு ராஜாமணி தலைமையிலான விவசாயிகள் தெரிவித்தனர். இதை நான் முதல்-அமைச்சரிடமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் சென்னை சென்று பேசி முடிவு தெரிவிக்கிறேன். தேர்தல் முடியும் வரை பணிகளை நிறுத்தக்கோருவது குறித்தும், பேசி விட்டு சொல்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

இதுபற்றி கொங்கு ராஜாமணி தலைமையிலான கூட்டியக்கத்தினர் கூறும்போது, அமைச்சரின் பதிலுக்கு காத்திருக்கிறோம், என்றனர். தற்போது உண்ணாவிரதம் இருந்து வரும் பெருமாள் தலைமையிலான கூட்டியக்கத்தினர் கூறும்போது, விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே எங்களின் உண்ணாவிரதம் தொடரும், என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com