சேரங்கோட்டில், 9-ந் தேதி டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

சேரங்கோட்டில், 9-ந் தேதி டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
சேரங்கோட்டில், 9-ந் தேதி டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பத்ரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக(டேன்டீ) 278 ஹெக்டேர் நிலம் வனத்துறையினருக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அந்த முடிவை கைவிடக்கோரி வருகிற 9-ந் தேதி சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட கழக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

கஸ்தூரி ரெங்கன் அறிக்கையின்படி 3 வயது குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். ஆனால் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நீலகிரியில் இடுஹட்டி, கீளூர் கோக்கலாடா, தங்காடு, ஹெத்தை, ஓரநள்ளி, காண்டிபுரம், கண்ணேரி மந்தனை ஆகிய அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் வாகனங்களை நிறுத்த மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்க வேண்டும். குன்னூர் அருவங்காடு உள்பட பல்வேறு வெடிமருந்து தொழிற்சாலைகளை ராணுவத்திடம் இருந்து பிரித்து நிறுவனங்களாக மாற்றி தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கைவிட வேண்டும்.

சமஸ்கிருதம் முதல் மொழி என தமிழக பாட புத்தகங்களில் அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். அவரவர் விரும்பும் மொழிகளில் படிக்க அனுமதிக்க வேண்டும். மத்தியில் பா.ஜனதா அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்து வருகிறது. தற்போது கல்வித்துறையிலும் அதிகாரத்தை நுழைத்து வருகிறது. இதை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜனதாவின் ஜனநாயக விரோத செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

முத்தலாக் சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க சட்ட திருத்தம் கொண்டு வரக்கூடாது. தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக யாரையும் கைது செய்யலாம்.

இது கடந்த காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிரானது. கஸ்தூரி ரெங்கன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து விவாதம் நடத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும். மேலும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com