கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அறிவியல் பாடப்பிரிவில் சேர மாணவ-மாணவிகள் குவிந்தனர்

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: அறிவியல் பாடப்பிரிவில் சேர மாணவ-மாணவிகள் குவிந்தனர்
Published on

திருச்சி,

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் வகுப்புகள் உள்ளன. இதேபோல அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், விஸ்காம், கணினி அறிவியல், பி.சி.ஏ. கணினி அறிவியல், புவியியல், புள்ளியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் கடந்த மே மாதம் வினியோகிக்கப்பட்டன. மாணவ-மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மொத்தம் 5 ஆயிரம் பெறப்பட்டதாக கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 4-ந்தேதி நடந்து முடிந்தது.

இதைதொடர்ந்து அறிவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது. இதனை பெற்ற மாணவ-மாணவிகள் நேற்று காலையில் கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி கலையரங்கத்தில் கலந்தாய்வு நடந்தது. அங்கு அறிவியல் பாடப்பிரிவில் 10 துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. இதில் பிளஸ்-2 தேர்வில் தமிழ், ஆங்கில பாட மதிப்பெண்களை தவிர்த்து அறிவியல் பாடம் தொடர்பான மற்ற 4 பாடங்களிலும் மொத்தம் 800 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் முதலில் 700-800 மதிப்பெண்கள் வரையும், அதன்பின் படிப்படியாக 50 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கலந்தாய்வு நடந்தது. இதில் அந்த மதிப்பெண்கள் எடுத்திருந்த மாணவ-மாணவிகளுக்கு தாங்கள் விரும்பிய துறைகளில் சேர இடம் கிடைத்தது. மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தவர்களுக்கு கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை. கல்லூரியில் இடம் கிடைத்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சாந்தா ராபின்சன் கூறுகையில், கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் பாடப்பிரிவில் ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்களும், கலைப்பிரிவில் ஒரு வகுப்பிற்கு 60 மாணவர்களும் என பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்தன. கல்லூரியில் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கைக்கான எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதை பல்கலைக்கழகம் தான் முடிவு செய்யும். கல்லூரியில் 20 வகுப்பறைகளும், 3 ஆய்வகங்களும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது என்றார். கலந்தாய்வில் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை அவர் வழங்கினார். கலைப்பாடபிரிவுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகளிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் குவிந்து வருகின்றனர். அரசு கல்லூரிகளை பொறுத்தவரை மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. அந்த வகையில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. அறிவியல் பாடப்பிரிவில் கணித துறையில் சேர அதிகம் பேர் விண்ணப்பித்திருந்ததாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதேபோல நாளை நடைபெற உள்ள கலந்தாய்வில் ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு மாணவ-மாணவிகள் அதிக அளவில் விண்ணப்பித்திருப்பதாக கூறினர். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவு என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவது உண்டு. இதில் இடம் கிடைக்காத பட்சத்தில் தனியார் கல்லூரிகளில் சேர்வது உண்டு. கலந்தாய்வில் நேற்று பங்கேற்க திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்தும், பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com