

ஏரியூர்,
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்தநிலையில் நேற்று முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருபவர் பிரகாஷ். இவர் நேற்று பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்தார். இதனால் மாணவர் பிரகாசை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர். பின்னர் தனது பாட்டியுடன் சென்று பிரகாஷ் முறையிட்டார். ஆனாலும் பள்ளியில் அனுமதிக்கவில்லை. இதனால் புத்தகப்பையுடன் பிரகாஷ் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி மாணவர் பிரகாஷ் கூறும்போது, நான் இன்னும் சீருடை தயார் செய்யவில்லை. எனது பெற்றோர் கல்குவாரியில் வேலை செய்ய கர்நாடக மாநிலம் சென்று விட்டனர். நான் ஏரியூரில் உள்ள எனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறேன். எனவே புதிதாக சீருடை வாங்கி தைக்க 15 நாட்கள் அவகாசம் தேவை. ஆனால் சீருடை அணியாமல் வந்ததால் பள்ளியில் அனுமதிக்க முடியாது என கூறி வெளியேற்றி விட்டனர் என்றார்.