குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ரெயில் மறியலுக்கு முயன்ற மாணவர்கள் கைது

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று ரெயில் மறியலுக்கு முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 47 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ரெயில் மறியலுக்கு முயன்ற மாணவர்கள் கைது
Published on

மதுரை,

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவர்கள் தரப்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

சங்கத்தின் மாநிலத்தலைவர் கண்ணன் தலைமையில், மாவட்டத்தலைவர் பாலமுருகன், செயலாளர் வேல்தேவா மற்றும் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் வந்து காலை 11 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக, ரெயில் நிலையத்தின் கிழக்கு, மேற்கு நுழவுவாயில், ஆர்.எம்.எஸ்.ரோடு ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கிழக்கு நுழவுவாயில் பகுதியில் உள்ள அனைத்து வாசல்களும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் ரெயில் நிலைய வளாகம் இருந்தது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென்று போலீசாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை திலகர்திடல் உதவி கமிஷனர் வேணு கோபால் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஒரு சில மாணவர்கள் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இழுத்துக்கொண்டும், குண்டுகட்டாக தூக்கிச்சென்றும் போலீஸ் வேனில் ஏற்றினர்.

இதற்கிடையே, மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் புறப்பட தயாரானது. அப்போது, அந்த ரெயிலுக்குள் இருந்து இறங்கி வந்த மாணவர் சங்கத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 5-வது பிளாட்பாரத்தில் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப் பினர்.இதனை சற்றும் எதிர்பாராதபிளாட்பார பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவர்களை கைது செய்து ரெயில்நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களை திலகர்திடல் போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இந்த போராட்டத்தில் 5 மாணவிகள் உள்பட 47 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால், மதுரை ரெயில்நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

மாணவர்களின் ரெயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து, ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் பத்மாகர் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com